காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!

Report Print Theesan in சமூகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள உறவுகள் ஊடாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தனித்தனியே தேடியலைந்த நாம் கடந்த 08.03.2017 இல் ஒன்றிணைந்து தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கினோம்.

இன்றைய தினம் எமது போராட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமது பிள்ளைகளைத் தேடி போராடிய எழுபது பெற்றோர் உயிரிழந்து உள்ளனர்.

2009 மே மாதம் இறுதி யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசின் பொய் வாக்குறுதிகளை நம்பி இராணுவத்தினரிடம் எமது உறவுகளைக் கையளித்தோம். வேறு சிலர் எமது முன்னிலையில் இராணுவத்திடம் தாமாகவே சரணடைந்தார்கள். சிலர் இராணுவத்தால் விசாரணைக்கு என கூட்டிச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலையில் வைத்தியம் செய்து கொண்டிருந்த போதும் கூட்டிச்செல்லப்பட்டனர். இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வெள்ளை வான் மூலமாகவும் இனம் தெரியாதவர்கள் மூலமாகவும் பலர் கடத்தப்பட்டனர்.

இவர்களை தேடிபோராடிய எமக்கு முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால அவர்களினால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. பின் தனது உறுதி மொழியை நிறைவேற்றுவதில் இருந்து அவர் பின் வாங்கினார்.

எமது கோரிக்கைக்கு தீர்வை தராத இலங்கை அரசிடம் நீதி கேட்டு பயன் இல்லை என்பதால் கடந்த 16.11.2017 இல் இருந்து சர்வதேசத்திடம் இருந்து நீதி கேட்டு போராடி வருகின்றோம்.

சர்வதேச ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்ட ஐ.நாவின் தீர்மானம் 30/1 க்கு அமைவாக இலங்கை அரசால் கலந்தாலோசனை செயலணி அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பரிந்துரைகளை உள்வாங்காது அமைக்கப்படும் நான்கு பொறிமுறைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை ஐ.நா. கூட அறிய முயற்சிக்கவில்லை.

2018 மார்ச் மாதத்தில் இருந்து மனித உரிமை கூட்டத்தொடரில் பங்கு பற்றி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் காணாமல் போனோர் அலுவலகத்தின் இயலாமையை அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க முடியாத OMP யை முற்று முழுதாக பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் நிராகரிப்பதாக கூறி வருகின்றோம். எனினும் இந்த செயலற்ற அந்த ஓ.எம்.பி யை பாராட்டிக் கொண்டு நான்கு பொறிமுறைகளையும் அமுல்படுத்துவதற்காக கால நீடிப்பையும் ஐ.நா.வழங்கி கொண்டிருக்கின்றது.

OMP ஆணையாளருடன் கடந்த 17.05.2019 இல் நாம் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இருந்தோம். அதில் கலந்துரையாடிய படி OMP யிடம் சாட்சியம் வலுவாக உள்ள ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தரவுகளை 20.07.2019 இல் அனுப்பியிருந்தோம். ஆனால் அவர்களால் இற்றவரை அதில் ஒன்றுக்கு கூட நீதியை வழங்கவோ குறைந்த பட்சம் விசாரணையை முன்னெடுக்க முடியவில்லை.

இந்நிலையில் 03.03.2020 இல் OMPயின் தலைவர் சாலியப் பீரிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இரண்டு வருடம் முடிவுற்ற நிலையில் காணாமல் போனோரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதை சரிபார்க்க முயற்சிக்கிறார்கள். மேலும் புதிய பொறிமுறை ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவின் தீர்மானத்துக்கு அனுசரணை வழங்குவதாக கூறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காலத்தை‌ கடத்திய இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை மூலம் மேலும் காலத்தை இழுத்தடிப்புச் செய்து காணாமல் போனோர் விவகாரத்தை நீத்துப்போகச் செய்யவே வழி வகுக்கின்றது.

எனவே ஐ.நா.வானது இலங்கை அரசாங்கத்திடம் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும்படி வலியுறுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற முடியாது.

எனவே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் பாரப்படுத்துவதற்கு அல்லதுவிசேட தீர்ப்பாயம் ஒன்றில் விசாரணை செய்வதற்கு வசதியாக பரிந்துரை செய்து ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்துமாறு தங்களை மன்றாட்டமாக கேட்டு நிற்கின்றோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.