சர்வதேச மகளிர் தினத்தில் கூட சந்தோசமாக வாழ முடியவில்லை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தில் கூட சந்தோஷமாக வாழ முடியவில்லையென கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தின் ஒன்றுகூடல் இன்று திருகோணமலை நகர சபைக்கு முன்னால் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி ஆஷா கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களுக்கான உரிமைகள். பெண்களுக்கான சலுகைகள் ஏற்படுத்துவதற்கான சர்வதேச நாடுகளே பிரகடனப்பபட்ட நாள்.

1015 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடி வருவதாகவும் , எந்தவித நீதியும் நியாயமும் கிடைக்கவில்லை எனவும், இதற்கான அரசாங்கம் தீர்வும் வழங்கப்படவில்லை எனவும், கருப்பு தினமாக நினைப்பதாகவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித உதவிகளும் செய்யப்படவில்லை எனவும், கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கான மரண சான்றிதழ் , காணாமல் ஆக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் இன்றி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தற்போதைய ஜனாதிபதியின் காலத்திலேயே ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் அதனை அறிந்தவராக இருக்கிறார் எனவும், இதற்கான நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வருகின்ற காலங்களில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு ஆவணத்தைத் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.