சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரதாசம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஶ்ரீபாத கல்வியியற் கல்லூரியும் தரமுயர்த்தப்பட்டு, அடுத்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவு செய்வதற்காக பந்துல குணவர்தன இன்றைய தினம் ஹட்டனுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை தொடரக் கூடிய வகையில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்ட அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காகவே இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டேன்.

இதன்படி கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், பல்கலைக்கழக கல்லூரியாக தரமுயர்த்தப்படும்.

அதேபோல் கொட்டகலையில் சர்வ வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமொன்றும் அமைக்கப்படும். அமைச்சரவை அனுமதி பெற்றப்பட்டு, அடுத்தாண்டுக்கான பாதீட்டில் நிதி ஒதுக்கப்படும்.

பொயிறியல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்பம் உட்பட முக்கிய விடயங்களை அங்கு கற்று கண்டுபிடிப்பாளர்களாகவும், நிர்மாணிப்பாளர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரதாசம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

அமைச்சர் பந்துல குணவர்தன கூறியதுபோல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கட்டங்கட்டமாக நடவடிக்கை எடுப்பார்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் பல நிறைய விடயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் அவர்கள் செய்யாத விடயங்கள் கூட செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.