மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமாக பிரதான வீதியூடாக காந்திபூங்காவிரையில் பேரணி வந்ததும் காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம், காணாமல்போனோருக்கான அலுவலகத்தினை நிராகரிக்கின்றோம், காணாமல் போனோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும், கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 43வது மனித உரிமை பேரவைக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால் வாசிக்கப்பட்டது.

காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தமிழ் தலைமைகளும் தங்களை ஏமாற்றியள்ளதாகவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கவன ஈர்ப்பு பேரணி மற்றும் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


you may like this video