யானை வேலி அமைப்பதற்கு வழங்கிய 20 இலட்சம் ரூபா எங்கே?

Report Print Navoj in சமூகம்

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது ஜீவனொபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

2007ம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் உருவாக்கப்பட்டது குகனேசபுரம் கிராமமாகும். இக்கிராமத்தில் 65 குடும்பங்களில் 350 நபர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இடம்பெயர்ந்த வீட்டுத் திட்டத்தில் 65 குடும்பங்களில் பத்து பேருக்கு மாத்திரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மலசலகூடம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை அமைத்து தரப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேறி தங்களது ஜீவனோபாய தொழிலான தோட்ட விவசாய செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் யானைகள் மற்றும் மாடுகளின் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனால் பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் யானை வேலி அமைப்பதற்கு 20 இலட்சம் பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதியை மக்கள் பெற்று வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளித்தும் இதுவரை யானை வேலி போடப்பட்டதாக தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் வாழும் மக்கள் கோடை காலங்களில் குடத்தில் நீர் சுமந்து தங்களது ஜீவனோபாய தொழிலான தோட்ட பயிர் செய்கைகளுக்கு நீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

யானை வேலி அமைப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகளுக்கு இருபது இலட்சம் வழங்கியும் யானை வேலி அமைக்கபடவில்லை என குகனேசபுரம் கிராம அபிவிருத்திச் சங்க உப செயலாளரும், யானைகளினால் பாதிக்கப்பட்ட நபருமான சுப்பிரமணியம் அருளம்மா தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் யானை வேலி அமைப்பதற்கு இருபது இலட்சம் ஒதுக்கப்பட்டது. இதனை அம்பாறைக்கு சென்று கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடான வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணத்தினை எடுத்து வழங்கினோம். ஒரு மாத்திற்குள் யானை வேலியை அமைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

வனவிலங்கு அதிகாரிகள் எங்களை வாகனத்தின் மூலம் அம்பாறைக்கு கொண்டு சென்றனர். அவ்விடத்திலேயே பணத்தினை வழங்கினோம். பணம் வழங்கி பத்து மாதங்கள் கடந்துள்ளது. இவ்விடயமாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கேட்ட போது யானை வேலை அமைக்கும் பணி இடம்பெறுவதாக கூறுகின்றனர்.

தற்போது யானை எங்கள் பகுதிக்கு மீண்டும் வந்தவுடன் தெரிகின்றது. இவர்களை யானை வேலி அமைக்கவில்லை என்று. இவர்கள் யானை வேலி போடுவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருப்பது ஏமாற்றத்தினை தருகின்றது.

எமது பகுதிகளுக்கு யானை வருவது தொடர்பில் அரச அதிகாரிகளிடம் தகவல் வழங்கினால் யாரும் வருகை தந்து பார்வையிடுவதும் இல்லை. இது எங்களுக்கு மிகவும் வேதனையை தருகின்றது என்றார்.

குகனேசபுரம் மக்கள் யானை மற்றும் மாடுகளினால் மிகவும் துன்பகரமான செயல்களை அனுபவித்து வருகின்றனர் என குகனேசபுரம் கிராமத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட நபரான சுப்பிரமணியம் சின்னத்தம்பி இவ்வாறு தெரிவித்தார்.

யானை வேலி கிராமத்திற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் போடப்பட்டுள்ளது. ஆனால் யானை வேலை சரியாக போடப்பட்டுள்ளதாக அல்லது யானை வேலி விழுந்தள்ளதாக என்று அதிகாரிகள் வருகை தந்து பார்வையிடுவதில்லை.

தென்னை மரங்கள் நாட்டிய காலம் தொடக்கம் காய்க்கும் காலம் வரைக்கும் யானைகள் தொடர்ச்சியாக வருகை தந்து பத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துச் செல்கின்றது. அத்தோடு மாடுகள் வந்து சேதப்படுத்தினால் மாடுகளை கட்டி வைத்தால் அதற்கான அதிகாரி நான்கு நாட்களுக்கு பிறகுதான் எமது பகுதிக்கு வருவார்கள்.

எமது பகுதியில் யானைகளினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான பொலிஸ் முறைப்பாடு மற்றும் அரச திணைக்களங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் எங்களுக்கு எந்தவித நஷ்ட ஈடுகளும் வழங்கப்படுவதில்லை. நஸ்ட ஈடுகள் கேட்டால் அது இப்போது இல்லை. வழங்க முடியாது என்றார்.

குகனேசபுரம் கிராமத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட நபரான சுப்பிரமணியம் தங்கப்பாக்கியம் தெரிவிக்கையில்,

குகனேசபுர கிராமத்தில் பதினான்கு வருமடாக வசித்து வருகின்றேன். பலரிடம் கடன் வாங்கி தோட்டங்களை செய்து வரும் நிலையில் யானைகள் மற்றும் மாடுகளுக்கு பயிர்களை உண்பதற்கு வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இடம்பெற்றால் நாம் எப்படி முன்னேற முடியும். இது தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் கிராமமட்ட அமைப்பினரிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் இருந்து குகனேசபுரத்தில் பதினான்கு வருடங்கள் ஒரு குடிசையில் ஐந்து நபர்கள் வாழ்கின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீடு தரவில்லை. வீடு தருவதாக பதிவு செய்து செல்வார்கள். ஆனால் எங்களை கவனிப்பது கிடையாது.

எனவே அரச அலுவலகத்தில் கடையாற்றும் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வாழ்க்கையை திறம்பட மேற்கொள்ள தகுந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஇ அலிஷாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், அரச அதிகார் உடனடியாக யானை வேலி அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.