கொரோனா வைரஸ் தாக்கம்! அரசாங்கத்தின் திட்டத்தை உடன் நிறுத்துமாறு எச்சரிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

சர்வதேச வியாதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் கொடிய ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட தொற்று நோயளர்களை மட்டக்களப்பிலுள்ள பற்றி. கம்பசில் தங்கவைப்பதென்பது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை திட்டமிட்டு அழிக்கும் ஒரு யுக்தியாகவே நாம் பார்க்கிறோம்.

இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இம்முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த போது கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் மக்கள் பேராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வு சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற போது தவிசாளரால் இப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இதன்போது அமர்விற்கு சமூகமளித்திருந்த 10 உறுப்பினர்களும் ஏகோபித்தமுறையில் கருத்துக்களை தெரிவித்து ஆதரவளித்தனர்.

இத்தீர்மானத்தை உடனடியாக ஜனாதிபதி தொடக்கம் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உபதவிசாளர் ஜாகீர் மற்றும் சபை உறுப்பினர்கள் உரையாற்றுகையில்,

இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கையில் பல தரிசு நிலங்கள் தெற்கில் இருக்கையில் இந்த தொற்று நோயாளிகளை ஏன் கிழக்கிற்கு கொண்டுவர வேண்டும்?

வடக்கு, கிழக்கு மக்களை திட்டமிட்டு அழிக்க அரசு நினைக்கின்றதா? பொருளாதாரத்தை நசுக்க முனைகிறதா?

உடனடியாக இம்முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களை இன்றைய அரசாங்கம் நம்பவில்லை.

தனி சிங்கள மக்களை மட்டுமே நம்பி காயை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மொட்டுச்சின்னத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் வேட்பாளர்களை நிறுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அதைவிடுத்து வடக்கு, கிழக்கு மக்களை மனிதனாக மதித்துச் செயற்படுங்கள். நல்லிணக்கம் தானாக உருவாகும். நாடும் வளரும் அபிவிருத்தி காணும் என குறிப்பிட்டுள்ளனர்.