பகிடிவதைகள் விவகாரம்: பேரவைக்கு அறிக்கையிடாத யாழ். பல்கலைக்கழக நிர்வாகம்

Report Print Rakesh in சமூகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதைகள் தொடர்பில் ஒரு சிறு குறிப்பேனும், பல்கலைக்கழப் பேரவைக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.

பகிடிவதை விவகாரத்தை மூடி மறைத்து முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபடுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் புதுமுக மாணவிகள் மீது பாலியல் ரீதியான பகிடிவதைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரால், பல்கலைக்கழக புதுமுக மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பில் விசாரித்த அதிகாரி மாணவனால் மிரட்டப்பட்டிருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய பேரவையின் அறிமுகக் கூட்டம் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றிருந்தது. அதன் பின்னர் 29ஆம் திகதி பெப்ரவரி மாதத்துக்கான கூட்டம் நடைபெற்றிருந்தது.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவைக்கு அறிக்கை சமர்பிக்கப்படுவது மரபாக இருந்த போதிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பேரவைக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகப் பகிடிவதை விவகாரத்தை மூடி மறைப்பதற்கான முயற்சியா இது என்று ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.