வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு செல்ல மக்கள் அச்சம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டடம் மேல் பகுதியிலிருந்து திடீரென்று தலைமேல் இடிந்து விழும் துண்டுகளால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருவதாகவும் இதனை சீரமைத்துத்தருமாறு வர்த்தக நிலைய உரிமையார்கள் கோருகின்றனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் ஐம்பது வருட பழமை வாய்ந்த கட்டடம். தற்போது கடந்த இரண்டு வருட காலமாக சீமெந்து மேல் பூச்சிலிருந்து இடையிடையே துண்டுகள் சில இடிந்து தலைமேல் வீழ்ந்து வருகின்றது.

முதலாம் மாடியிலுள்ள தளம் உட்பட மேல் தளத்திற்கு அடிக்கப்பட்ட மட்டைசீட் சீர் இன்மை இவ்வாறு பல்வேறுபட்ட குழறுபடிகள் காணப்படுகின்றன.

இதனால் வியாபார நிலையத்திற்கு வருவதற்கு மக்கள் அச்சமடைந்து வருவதுடன் கட்டடப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து கடந்த காலங்களில் நகசரபையினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் நடவடிக்கை போதியளவு இடம்பெறவில்லை.

மலசல கூடத்திற்கு செல்லும் பகுதி அகற்றப்பட்டுள்ளது. அதுவும் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் அறைகுறையாகவும் சீரமைக்கப்படாமலும் உள்ளது.

இவ்வாறு பல்வேறு வேலைகள் திட்டமிட்டு செய்யப்படவில்லை. நகருக்கு வரும் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தும் வருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டபோது,

அப்பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இவ்விடயம் குறித்து எழுத்து மூலமான முறைப்பாடுகள் வர்த்தகர் சங்கத்தினருக்கு மேற்கொள்ளும் பட்சத்தில் இவ்விடயம் குறித்து நகரசபையினருடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.