கொரோனா வைரஸ் தொற்று! வெளிநாட்டு பணத்தினை இலங்கை ரூபாவில் மாற்றுவதற்கு எதிர்ப்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை இலங்கை வங்கியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தாக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டு பணத்தினை இலங்கை ரூபாவில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு பிரதேச இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் வாழைச்சேனை இலங்கை வங்கியின் முன்பாக இன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வங்கியின் நடவடிக்கைகளில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது தேவை கருதி வங்கியில் தமது பணங்களை மாற்றுவதற்கு எடுத்த முயற்சி தொடர்பான தகவல் அறிந்தே இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கியின் முன்பாக கூடிய இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம். அவை தமது பிரதேசங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அச்சம் தெரிவித்தே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து அவ்வாறான தகவல் பொய்யானது என்றும், குறித்த செயற்பாடு வங்கியில் இடம்பெறாதெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.