மன்னாரில் கொரோனா சோதனை நிலையம் - வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Report Print Ashik in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை மன்னாருக்கு அழைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு மன்னார் மாவட்டத்திற்கு அழைத்து வருவதாக வெளியாகிய தகவலின் அடிப்படையில் இன்று மாலை மன்னார் பஸார் பிரதான வீதியில் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், மன்னார் மாவட்டம் , வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளை குறிவைத்து அரசாங்கம் தொடர்சியாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் , அதிகமான இடங்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாக காணப்படுகின்ற போதும் மன்னார் பகுதியில் குறித்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூடாது எனவும் , அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிகளில் வைத்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ சேவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதிகளில் அதிகம் மக்கள் வாழ்வதாகவும், அங்குள்ள மக்களின் நோய்களுக்கு சிகிச்சை வழங்க ஒழுங்கான மருத்துவர்கள் இல்லாத நிலையில் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதை மீறி பாதிக்கப்பட்டவர்களை மன்னார் மாவட்டத்திற்குள் கொண்டு வரும் பட்சத்தில் பேரூந்துகளை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களுடன் உரையாடி, அவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் தடுப்பதாகவும், அவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் எனவே பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.