ஆகாயத்தாமரையால் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் மீனவர்கள்!

Report Print Yathu in சமூகம்
175Shares

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை படிப்படியாக குறைக்க அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகள் இன்றுவரை வெற்றியடையவில்லை. கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் நன்னீர் மீன்பிடியை நம்பி 55 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் ஆகாயத்தாமரை என்ற தாவரப்படர்கையினால் 10 ஆண்டுகளாக பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகாயத்தாமரை மற்றும் அதனுடன் இணைந்து படர்ந்துவரும் ஓர்வகை புல்லினத்தை அழித்து, தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு மீனவர்களால் பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அம்மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை குறித்த குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு தமது வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த கோரிக்கைகள் படையினர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் முன்வைக்கப்பட்டதாகவும் ஆகாய தாமரையை அழிப்பதற்கான இயந்திரங்கள் இல்லாமையால் அதனை தம்மால் அழிக்க முடியாது உள்ளதாக படையினர் தெரிவித்ததாக கூறும் மீனவர்கள், குறித்த இயந்திரத்தை பெற்றுத்தந்தால் தாம் அழித்து தருவதாக படையினர் தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தினை 80 மில்லியன் நிதியில் ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளத்தின் பெரும்பகுதி குறித்த தாவரத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மீனவர்கள் தமது தொழிலை முறையாக முன்னெடுக்க முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

தொழிலாளர்கள் குறித்த குளத்தை நம்பி வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது 15 பேருக்கு குறைவானவர்களே தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.