வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் முண்டியடிக்கும் பொதுமக்கள்!பொருட்களுக்கும் தட்டுப்பாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளமையினால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பலசரக்கு மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு விஜயம் செய்து சுகாதார பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து வருகின்றனர். இதனால் அப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீனி, பால்மா பைகற், மாஸ், அன்ரிபற்றீரியல் கான்ட் வோஸ், அன்டிபற்றியல் கான்ட் ஜெல், இஞ்சி, பெருங்காயம், பூடு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் அதனை பெற்றுக் கொடுக்க முடியும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது ,

தற்போதைய நிலையில் கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் வவுனியாவிற்கு பொருட்களை கொண்டு வருவதும் வவுனியாவிலிருந்து பொருட்களை கொண்டு செல்வதும் எந்த தங்கு தடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான முறையில் பொருட்களை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் வர்த்தகர்கள் இரவிலும் தங்கள் வர்த்தக நிலையங்களை நீண்ட நேரம் திறந்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் திடீரென அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதனால் வர்த்தக நிலையங்களில் ஏற்கனவே இருக்கும் கையிருப்புக்களை விட மேலதிகமான பொருட்கள் தேவைப்படுகின்றது.

இதன் மூலம் வர்த்தகர்கள் சில நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார்கள். இது ஒரு சில நாட்களில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆகையால் பொதுமக்கள் அச்சம் அடைவதினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுமக்களுக்கு தொடர்ந்தும் சிறந்த முறையில் பொருட்களை விநியோகிப்பதற்கு வவுனியா வர்த்தகர்கள் அக்கறையுடனும், பொறுப்புடனும் செயற்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.