மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்து வரும் டெங்கின் தாக்கம்! சிரமதான பணிகள் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்
55Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் குறைந்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த 11ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு கறுப்பங்கேணியில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணியை முன்னெடுத்திருந்தது.

டெங்கு நோயாளிகள் அதிகளவு அடையாளம் காணப்பட்ட பகுதியாக கறுப்பங்கேணி இருந்த காரணத்தினால் இப்பகுதியில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார பணிக்குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் மாதாந்தம் 10 தொடக்கம் 15பேர் வரையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.