ஜெனீவாவில் திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள் இரத்து! கொரோனாவால் இலங்கை தொடர்பான விவாதங்களுக்கும் தடை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலும், அதற்கு எதிராகவும் ஜெனீவாவில் நடத்த திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 1,000இற்கும் மேற்பட்ட மக்கள் பொதுக் கூட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து, பிரதான உச்சி மாநாட்டைத் தவிர ஏனைய அனைத்து இணை மனித உரிமைகள் தொடர்பிலான கூட்டங்களையும் இரத்து செய்ய சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் சிங்கள மற்றும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கு தமது கருத்துக்களை வெளியிடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

பேராசிரியர் டொனால்ட் சந்திரரத்ன, பிரித்தானிய சட்டத்தரணி ஜெயராஜ் பாலிஹவடன, ரிஷ் உடவத்த, சுவிட்ஸர்லாந்தின் ரனில் ஜெயநெத்த, சட்டத்தரணி டெனி பெர்னாண்டோ, நுவன் பெல்லந்துடாவ, அமெரிக்காவின் எஞ்சலிகா சில்வா அவுஸ்திரேலியாவின் ஜானகி சந்திரன் ஆகியோருக்கு, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கு, சர்வதேச ஆதரவைக் கோரி, அழுத்தம் கொடுக்கத் தயாராகி வரும் தமிழ் புலம்பெயர்ந்தோர் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பல கூட்டங்களையும் கொரோனா வைரஸ் தடுத்துள்ளது.