வெறும் கையுடன் வீடு திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர்ப்பகுதிகளுக்கு வருகைதந்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறும் கையுடன் வீடு திரும்பவேண்டிய நிலை இன்று ஏற்பட்டது.

தோட்டப்பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு வருவதற்கு உரிய நேரத்தில் போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மை, தடைகளுக்கு மத்தியில் வருகை தந்தபோதிலும் பெருமளவில் மக்கள் கூடியிருந்தமையினால் வரிசையில் காத்திருந்து நேரத்தை முகாமை செய்து கொள்ள முடியாமல் போனமை உட்பட மேலும் சில காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்பட்டது.

அத்துடன், மேலும் சில தொழிலாளர்கள் பிற்பகல் 2 மணிக்கு பின்னரே நகரங்களை நோக்கி வந்துள்ளனர்.

எனினும், அவ்வேளையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்ததால் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கால எல்லை தொடர்பான தகவல்களை தொழிலாளர்கள் உரியவகையில் அறிந்து வைத்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் 26ம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதுவரை என்னசெய்வதென புரியவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்டப்பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கபடுகின்றது. விசேட அதிரடிப்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Offers

loading...