உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸின் சீற்றம் தணியும் அறிகுறி இல்லை! வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

Report Print Jeslin Jeslin in சமூகம்
1484Shares

உலகலாவிய ரீதியில் புதிய கொவிட் 19 வைரஸின் தொற்றுக்கு இலக்காகி வருபவர்களினதும் மரணம் அடைபவர்களினதும் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது அதன் சீற்றம் தனிவதற்கான அறிகுறி இல்லை.

உலக சுகாதார நிறுவனம் நேற்று மாலை வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸின் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பெய்ஜிங் அறிவித்திருக்கின்ற அதே வேளை ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புதிதாக தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகின்றது.

நியூயோர்க்கில் ஆயிரம் பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் அல்லது ஏனைய பகுதிகளையும் விட ஐந்து மடங்கு கூடுதலாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் வைரஸ் நெருக்கடி ஒருங்கிணைப்பாளரான டிபோரா எல். பிறிக்ஸ் கூறியிருக்கிறார்.

வைத்தியசாலைகளில் கட்டில்களின் தொகையை 50 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு நியூ யோர்க் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் சனத்தொகை செறிவு அதிகமான நகரங்களில் ஒன்றான நியூயார்க் இப்போது மூடப்பட்டிருக்கிறது.

திங்களன்று இரவோடிரவாக ஏற்பட்ட அதிகரிப்புடன் சேர்த்து அங்கு 20 ஆயிரத்து 875 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார்கள்.

2020 ஒலிம்பிக் பற்றிய தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவும் கனடாவும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து ஏற்கனவே விலகி விட்டன.

சீனாவுக்கு அடுத்ததாக கொவிட் 19 வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் திங்களன்று மரணங்களும் ஒரு சிறு வீழ்ச்சி காணப்பட்டது.

வைரஸ் பரவலை அடுத்து உலகம் பூராவும் பெரும் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் உலகின் சகல மூலைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியா குட்டரஸ் ஆயுத மோதல்களை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவல் மீது கூட்டாக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

வைரஸின் சீற்றம் போரின் அபத்தத்தை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. மோதல்களில் இருந்து பின் வாங்குங்கள். அவன் நம்பிக்கையையும் பகைமையையும் ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள்.

துப்பாக்கிகளை மௌனமாக்குங்கள். நிறுத்துங்கள். தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள். உயிரை காக்கும் உதவிக்கான வழியை திறவுங்கள். என்று போர்களில் ஈடுபட்டிருக்கும் தரப்புக்களை ஐநா செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதாநொம் கேப்ரிசியஸ் வைரஸ் வேகம் அடைந்து கொண்டிருக்கின்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.