வவுனியா மக்களுக்கு பொலிஸ் வாகனம் மூலம் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்
145Shares

வவுனியா மக்களுக்கு பொலிஸ் வாகனம் மூலம் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியா பொலிஸாரினால் நேற்று விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாரினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகர் , வங்கிகள் , பஜார் வீதி , ஏ9 வீதி , ஹோரவப்போத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் உங்களை பாதுகாப்பதற்கு கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பலகியிருந்தால் தங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.

அத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.மற்றவர்களுடன் பலகும் சமயத்தில் குறைந்த பட்சம் ஒரு மீற்றர் தூரத்தினை பேணுதல் அவசியமாகும்.

மேலும் சுகாதார பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் வேண்டும் . இருமல் , தும்மல் வருகின்ற சமயத்தில் முகத்தினை மறைத்தல் அவசியமாகும்.

தொடர்ந்தும் சவக்காரம் பாவித்து கை கழுவுதல் வேண்டும் . கொரோனா நோயாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருப்பது தண்டணைக்குறிய குற்றமாகும் என பொலிஸாரினால் வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.