யாழ்.உடுவில் தாவடி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற தடை!

Report Print Steephen Steephen in சமூகம்

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் தாவடி கிராமத்தில் வசிக்கும் மக்களை மீண்டும் அறிவிக்கப்படும் வரை கிராமத்தை விட்டோ அல்லது வீடுகளை விட்டோ வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதும், அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த போதகர் நடத்திய பிரார்த்தனையில் கலந்துக்கொண்ட அதிகமான மக்கள் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாவடி கிராமத்திற்குள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்கான அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், இராணுவம் தற்காலிக காவலரணை அமைத்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மக்களின் பாதுகாப்பு மற்றும் நோய் பரவலை தடுக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் மாத்திரம் யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை கொரோனா தொற்றியதாக வேறு எவரும் உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த போதகருடன் உரையாடிய ஒப்பந்தகாரர் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் 21 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேரை தவிர ஏனையோர் மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஏனைய 5 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுவதுடன், அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்றவில்லை எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.