திருகோணமலையில் போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தல்!

Report Print Rakesh in சமூகம்
432Shares

யாழ். அரியாலையில் சுவிட்சர்லாந்திலிருந்து வந்த மத போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

குறித்த போதகர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவர் தற்போது வரை உடல் நலத்துடன் இருக்கின்றார் எனவும் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

எனினும், அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள்தொடர்பில் தற்போது ஆராயப்படுகின்றது.

அரியாலைப் பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த மத போதகர் ஒருவரால் ஆராதனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், அவர் கொரோனா தொற்று காரணமாக தற்போது சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த போதகருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனாத் தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இதனால் சுவிஸ் போதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் ஆராதனையில் கலந்து கொண்டவர்களையும் பதிவு செய்யுமாறு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.