ஊரடங்குச் சட்டம் தொடர்பிலும் தளர்த்தப்படும் நேரத்திலும் வெளிவந்துள்ள தகவல்கள்

Report Print Rakesh in சமூகம்

உலகை ஆளும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்கும் பரவத் தொடங்கியதால் தற்போது சில நாட்களாக இலங்கையில் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கேற்ப, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும்,

மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மாவட்டங்களில் வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 6 மணி வரை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் 715 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.