ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியதற்கான நோக்கம் மறுக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன்

Report Print Ashik in சமூகம்

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற மரக்கறி வகைகள் மற்றும் மீனவர்கள் பிடிக்கின்ற மீன்களை நேரடியாக மக்களுக்கு சென்றடையக் கூடிய வழிமுறைகளை வடமாகாண ஆளுனர் மேற்கொண்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸின் தொற்று குறைவடைந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டது.

ஆனால் அந்த ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது என்ன நோக்கத்திற்காக ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டதோ அந்த ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இங்குள்ள வர்த்தக நிலையங்களில் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை கொள்வனவு செய்கின்ற நிலைமையை அவதானிக்கின்றோம்.

என்ன நோக்கத்திற்காக அரசாங்கம் ஊரடங்குச்சட்டத்தை அமுல்ப்படுத்தியதோ அதேநோக்கம் இங்கு மறுக்கப்படுகின்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை கொள்வனவு செய்கின்ற போது எமது நோக்கம் வீணாகின்றது.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுனருடன் இன்று காலை தொடர்பு கொண்டு உரையாடினேன்.

குறிப்பாக வடக்கில் உள்ள அரசாங்க அதிபர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை தேடிச் சென்று அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும், அதற்கான உத்தரவை அரசாங்க அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து அதனை மக்களுக்கு சென்றடையக்கூடிய வழி முறைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பி தாங்கள் பிடித்த மீன்களை ஊரடங்கு சட்ட நேரத்தில் மக்களிடம் கொண்டு விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில் மீனவர்களினால் கரைக்கு கொண்டு வரப்படுகின்ற மீனை கொள்வனவு செய்து மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லுகின்றவர்கள், அதனை ஏற்றிச் செல்கின்ற வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டாம் என்ற உத்தரவை முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் வினவினேன், முப்படைகளையும் அழைத்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்தார்.

துரித நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. மக்களை உதவிகள் நேரடியாக சென்றடைகின்ற போது மக்கள் மென்மேலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எனவே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண ஆளுனருக்கும், பணிகளை துரிதப்படுத்தி வருகின்ற அரச அதிபர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.