ஊரடங்குச் சட்ட காலப்பகுதில் மன்னாரில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்
56Shares

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று காலை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பியந்த, மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க,பிரதேசச் செயலாளர்கள், பொலிஸ்,கடற்படை, இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது ஊரடங்குச் சட்டத்தின் போது கொழும்பில் இருந்து உலர் உணவுப்பொருட்களை மன்னாரிற்கு கொண்டு வருதல் தொடர்பான நடை முறைகள், மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது உலர் உணவுப் பொருட்களை கொழும்பில் அல்லது தெற்கு பகுதிகளில் இருந்து கொண்டு வருவதற்கான போக்குவரத்து அனுமதி (பாஸ்) வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கு அனுமதிப்பதாகவும், அதற்கான பாஸ் நடமுறையினை மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினூடாக வழங்க இனக்கம் காணப்பட்டது.

மேலும் உணவுப் பொருட்களை விரைவாக மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதற்கு அமைவாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடப்பட்டது. அதற்கு அமைவாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாஸ் நடை முறையை பின் பற்றி உரிய நடை முறைகளை பின் பற்றுமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

மேலும் மீன்ரின், பருப்பு போன்றவை கட்டுப்பாட்டு விலையில் விற்க வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட மீனவர்களை மீன் பிடிக்க அனுமதி வழங்குவதாக கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

மீனவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடலுக்குச் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியும். ஒரு படகில் இருவர் மாத்திரமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை மட்டு மே சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு மீன்பிடி விசேட அனுமதியின் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என பிராந்திய கடற்படை அதிகாரி குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

மேலும் வர்த்தகர்கள் கொள்வனவு செய்கின்ற பொருட்களை கிராம மட்டங்களில் உள்ள சிறிய வர்த்தக நிலையங்களை சேர்ந்த வர்த்தகர்களுக்கு விற்பனைக்காக மொத்தமாக வழங்க வேண்டும்.

அதற்கான அனுமதியும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வியாபார நடவடிக்கை மூலம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த ஏற்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு இடையில் இடைவெளிகள் காணப்பட வேண்டும் என்பதோடு பொருட்கள் விநியோகிக்கப்படும் போது பொலிஸ் அதிகாரி உட்பட நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கடமையில் இருப்பார்கள்.

இதன் மூலம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள முந்தி அடிக்கின்ற செயற்பாடு குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமைக் கோட்டிற்குற்பட்ட எவ்வித நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.