ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மாற்று நடவடிக்கை! வவுனியா நகர சபை தவிசாளர்

Report Print Theesan in சமூகம்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் கௌதமன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தளர்த்தப்படுகின்றது.

எனவே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரை நோக்கி அதிகளவில் வருவார்கள்.

நேற்றைய தினமும் ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்டபோது அதிகளவான மக்கள் நகரை நோக்கி வந்தமையால் திட்டமிட்டவகையில் சன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது.

இதனால் வைரஸ் தாக்கம் இலகுவாக பரவகூடிய நிலை ஏற்பட்டிருந்தது. எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் அந்த நிலை எற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தவகையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்துவந்து விற்பனை செய்துகொள்ள முடியும். அதற்காக சில பகுதிகளை நாம் ஒதுக்கியுள்ளோம்.

காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாகவும், ஹொரவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் நகரில் சில்லறை மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளையும் அந்த பகுதிகளில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உத்தரவிடவுள்ளதுடன், மொத்த மரக்கறி விற்பனை சந்தையில் சில்லறை வியாபாரம் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்படும்.

அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வீதிகளை மூடுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக சந்தை சுற்றுவட்ட வீதிக்குள் நுழையும் அனைத்து குறுக்கு வீதிகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதற்குள் வாகனங்களில் பயணிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுகொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.