இராணுவத்தின் மூலம் மீனவர்களை அச்சுறுத்திய தனியார் நிறுவனம்

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - சிலாவத்தையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா பீதியால் நீண்டநாட்களின் பின்னர் சிலாவத்தை பகுதியில் பிரதேச மீனவர்கள் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர், மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என தடுத்ததோடு, இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் தனியார் நிறுவனமொன்றின் பெயரை குறிப்பிட்டு அதன் அனுமதி பெற வேண்டும் எனவும், தமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த தனியார் நிறுவன அதிகாரி பிரதேச இராணுவ அதிகாரிக்கு அழைப்பு மேற்கொண்டு தமது நிறுவனம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியை மேற்கொள்வதை தடுக்குமாறு கூறி அருகில் இருந்த இராணுவ முகாம் படையினரை ஏவி தம்மை தடுத்ததாக பிரதேச மீனவர்கள் குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்றவற்றை பார்வையிட்டு தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் மீன்பிடியை தடுத்தமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில் மீண்டும் அந்நிறுவனம் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த தனியார் நிறுவனத்தால் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...