இலங்கையில் கொரோனா ஏன் பரவியது? காரணத்தை போட்டுடைத்த கிரியெல்ல!

Report Print Gokulan Gokulan in சமூகம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொரோனா வைரஸ் பரவுகின்றமை குறித்த முன் எச்சரிக்கையை கோட்டாபய,மஹிந்த தலைமையிலான அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை தவிர்த்திருந்திருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அத்தனை முயற்சிகளுக்கும் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயார் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்திற்குள் ஒரு பேசுபொருளாக அதனை அடையாளப்படுத்தவே அவருக்கு அவசியமாக இருந்தது. இந்த வருடம் பெப்ரவரி உரையின் போது, இலங்கை நாடு கொரோனா வைரஸின் அடிவாரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த வைரஸ் பரவுகின்ற வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கமைய விமான நிலையம், துறைமுகம் என்பவற்றுக்கு வரையறைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், பரிசோதனை தனிமைப்படுத்தும் முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த அறிவிப்பு ஊடாக முன்னரே அரசாங்கத்திற்கும் தகவல் ஒன்றை வழங்கியிருந்தோம்.எனினும் பெப்ரவரி 5ஆம் திகதி சஜித் பிரேமதாஸவின் அறிவிப்புக்கு அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதிலொன்று கிடைக்கவில்லை.

இந்த அறிவிப்பை அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இந்த அழிவை குறைத்திருக்க முடிந்திருக்கும்.

விமான நிலையத்தை அண்மையிலேயே அரசாங்கம் மூடியது.தாமதமாகியும் அரசாங்கம் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதையிட்டு நன்றி கூறுகிறோம்.

எமது நாட்டில் சிறந்த மருத்துவர்களும், படை அதிகாரிகளும் இருக்கின்றனர். அனைவரும் ஓரணியாகத் திரண்டு நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

எதிர்கட்சி என்ற வகையில் நாட்டுப் பற்று காரணமாகவே இதனைக் கூறுகிறோம். நாட்டைக் காப்பாற்றும் அத்தனை செயற்திட்டங்களுக்கும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...