மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுப்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுத்து வந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் பொருட்களை வாங்குவதை காணக்கூடியதாக இருந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்காததால், அது வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு இலங்கையையும் முடக்கும்வகையில் அரசாங்கம் பொலிஸ் ஊடரங்குச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொலிஸ் ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்படும் வேளையில், நகரங்களுக்கு வருபவர்கள் தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வரிசைகளில் நிற்கும் போது குறைந்தபட்சம் ஒரு அடி இடைவெளியேனும் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், ஹட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கு இன்று வருகை தந்து, பொருட்கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

ஹட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களில் வங்கிகளிலும் சனக்கூட்டம் காணப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டமையினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.