வடக்கில் அத்தியாவசிய பொருட்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம்

Report Print Ashik in சமூகம்

வட மாகாணத்தில் நாளைய தினம் குறிப்பாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் காலை 6 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை தளர்த்தப்படவுள்ள நிலையில் மாவட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் இன்றைய தினம் மொத்த வியாபாரிகளுக்கும், அதே நேரத்தில் கிராம மட்டத்தில் இயங்கும் சிறிய வியாபாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் ஊடாக வழங்கப்பட்டுள்ள விசேட பாஸ் அனுமதியுள்ள விநியோகஸ்தர்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நாளைய தினம் ஏற்படுகின்றன சன நெரிசலை குறைப்பதற்காகவும், நபர்களுக்கான இடை வெளியை நடை முறைப் படுத்துவதற்காகவும் பாதுகாப்புக்காகவும் முப்படையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அரச அறிவிப்புக்கு அமைவாக மீனவர்கள் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

அதே நேரத்தில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தினால் பொலிஸாரின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வைத்தியசாலை மற்றும் மருந்தகங்களில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மரக்கறி, மீன், அத்தியாவசிய பொருட்கள், விற்பனை நிலையங்களில் பொருட்கள் அதி கூடிய விலைக்கு விற்காத வகையில் நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.