யாழ். மாவட்டத்தில் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் சகல உள்ளூர் கடைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள ஆளுநர், நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றார்.
வாகனங்களில் சென்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவிக்கையில்,
வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்டச் செயலாளர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
மரக்கறி மற்றும் கடலுணவு..
மரக்கறி மற்றும் கடலுணவை வியாபாரிகள் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்து ஊர்களில் சென்று நேரடியாக மக்களிடம் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்படுகின்றது.
மருந்தகங்கள்..
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும். கிளினிக் கொப்பிகளுடன் சென்று மருந்தகங்கள் அல்லது அருகில் உள்ள மருந்தகங்களில் மருந்து வாங்க அனுமதிக்கப்படுகின்றது.
வெதுப்பகங்கள், அரிசி ஆலைகள்..
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோதும் வெதுப்பகங்கள், அரிசி ஆலைகள் இயங்கலாம். வெதுப்பகங்கள் தமது உற்பத்திகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதியளிக்கப்படுகின்றது. அதேபோல் மாகாணத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாதவகையில் அரிசி ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம்.
அதேபோல் வெளிமாவட்டங்களுக்கு அரிசி கொண்டு செல்லல் தொடர்பாக அதிகாரிகள் தீர்மானிப்பர்.
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு அரிசி கொண்டுவருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட புதிய ஒழுங்குகள் உடன் அமுலுக்கு வருவதோடு வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இந்த புதிய ஒழுங்குகள் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.