நாட்டுக்குள் காணப்படும் நிலைமையை சிறிதாக கருத வேண்டாம் - சுகாதார துறையினர்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டிற்குள் காணப்படும் நிலைமையை சிறிதாக கருத வேண்டாம் என சுகாதார துறையினர் பொது மக்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளனர்.

அத்தியவசிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார துறையினர், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளை மக்கள் மீறி நடந்துக்கொண்டால், இலங்கைக்கும் விரைவில் இத்தாலிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் மரண ஆபத்து சம்பந்தமாக கடந்த சில நாட்களாக மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்புக்காக தொடர்ந்தும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது முழு நாட்டு மக்களையும் ஆபத்தில் தள்ளும் வகையில் பொறுப்பின்றி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாதுகாப்பு தரப்பினரிடம கோரிக்கை விடுத்துள்ளது.

சிலர் நபர்கள் பொறுப்பின்றி செயற்படும் இப்படியான தருணத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபரின் மூத்த புதல்வி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அவிசாவளை எஸ்வத்தை பகுதியில் நேற்று நடந்துள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து சிந்தித்து அந்த நபர் தனது மகளின் இறுதிச் சடங்கில் கூட கலந்துக்கொள்ளவில்லை எனவும் இதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.