வவுனியாவில் திடீரென உயிரிழந்த பெண் - கொரோனா தொற்று என சந்தேகம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கலாராணி என்பவரே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில்,குறித்த பெண்மணி காய்ச்சல் வருவதற்கு முன்னையநாட்களில் யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.