கொரோனா வைரஸ் தொற்று - யாழ். வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“வைத்தியசாலையின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகப்படக்கூடிய நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கவும், பரிசோதிக்கவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பரவலை தடுத்தல், சுயபாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சைகளும் நடைபெற்று வருவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.