2500க்கும் மேற்பட்ட கைதிகள் பிணையில் விடுதலை!

Report Print Ajith Ajith in சமூகம்

2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் இன்று நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2 ஆயிரத்து 961 கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக சிறிய குற்றங்கள், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத கைதிகளுக்கு சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை வழங்க ஜனாதிபதி விசேட குழுவை நியமித்தார்.

1500 கைதிகளுக்கு பிணை

ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் என்பன சுமார் 1500 பேருக்கு பிணை அனுமதியை வழங்கியுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் கூட நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பின்பேரில் இந்த நீதிமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டு நாள் அமர்வுகளும் நீதிமன்ற விடுமுறைகளுக்கு முன்னர் இடம்பெற்ற இறுதி அமர்வுகளாக இருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றை சிறைச்சாலைகளில் குறைக்கும் வகையிலேயே இந்த இரண்டு நாள் நீதிமன்ற அமர்வுகளும் இடம்பெற்றுள்ளன.