கொரோனா முற்று முழுதாக அழிக்கப்படும்! மனிதர்கள் வெற்றி பெறுவர்!!

Report Print Tamilini in சமூகம்

எமது வீட்டிலிருந்து 220 மீற்றர் தொலைவில் ஒரு பண்ணைக்கடை உள்ளது. அங்கே ஒருபோதும் விற்பனையாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

இன்று காலை அங்கே சென்று ஒரு கிலோ வெங்காயம்(3 சுவிஸ் பிராங்குகள்), ஒரு கிலோகிராம் அப்பிள்(மூன்று சுவிஸ் பிராங்குகள்), 20 முட்டைகள்(11 சுவிஸ் பிராங்குகள்), லீக்ஸ் அரைக் கிலோ(2.75 சுவிஸ் பிராங்குகள்) என்பனவற்றை நானாக நிறுத்து எடுத்துக்கொண்டு 20 சுவிஸ் பிராங்குகளை அங்கே இருந்த ஒரு பணப்பெட்டியில் செலுத்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன்.

எனக்கு எதிரே ஒரு வெள்ளைப்பூனை வந்துகொண்டிருந்தது. நான் அருகே வருதற்கு முன்னே சரியாக ஒதுங்கி இரண்டு மீற்றர் இடைவெளிவிட்டு நின்றது. இந்தப் பூனைகூட சுவிஸில் கொரோனா நிலைமையை உணர்ந்து நடந்துகொள்கிறதா? என்று ஆச்சரியப்பட்டேன்.

சுவிஸில் ஊரடங்குச் சட்டம் இல்லை. அத்தியாவசிய சேவைகள் நடைபெறுகிறது. பொருட்கள் போதுமான அளவு கிடைக்கிறது.

சுவிஸ் அரசு கடந்த 13.03.2020 அன்று வீட்டிலிருக்குமாறு வேண்டிக்கொண்டதனை மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்று அவர்களின் கைத் தொலைபேசிகளின் நகர்வுகளைக்கொண்டு கண்டறிந்து தகவல்கள் திருப்திப்படுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

எப்படியிருப்பினும் கொரோனாவின் பரவல் தொடர்கிறது. இன்று வரை சுவிஸில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. சுமார் 734 மக்கள் மரணித்து விட்டார்கள். கடந்த 24 மணிநேரத்துக்குள் 552 புதிய நோயாளர்கள் உருவாகிவிட்டனர்.

ஒரு அவநம்பிக்கையான சூழல் தோற்றம்பெறும் பட்சத்தில் சுவிஸில் மட்டும் இம்மாத முடிவில் 7 இலட்சத்தி 47ஆயிரம் மக்கள் கொரோனா தொற்றிற்கு ஆட்பட,31.08.2020 இற்குள் 97109(தொண்நூற்றி ஏழாயிரத்து நூற்றியொன்பது மக்கள் மரணத்தைத் தழுவியிருப்பர் என்று சுவிஸ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று அதி பயங்கரமான ஆய்வை வெளியிட்டுள்ளது.

இந்த அவ நம்பிக்கையான கணக்கு நடைபெறக் கூடாது என்பதே இன்றைய கோசங்களான வீட்டிலிருங்கள் - வீட்டிலிருங்கள், இடைவெளி - இடைவெளி, கைகழுவுங்கள் - கைகழுவுங்கள் என்பதன் பொருளாகிறது.

புலம் பெயர் தமிழ் மக்கள் பலர் இந்த நோயால் மரணத்தைத் தழுவியும்,குடும்பம் குடும்பமாக இந்த நோயின் பிடியில் சிக்குண்ட தகவல்களும் நெஞ்சைப் பிழிகிறது. தனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்கள் மரணத்தின் முன்னரே பல மரண வேதனைகளைச் சுமக்கின்றனர்.

இதுவரை நோய்த் தொற்று ஏற்படாத எவரும் தனக்கு மட்டும் இந்நோய் ஏற்படமாட்டாது என்று நினைக்க வேண்டாம். கொரோனா அரசனென்றோ, பிரதமர் என்றோ, சுகாதார அமைச்சர் என்றோ, பிரதமர் மனைவி என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ, குழந்தை என்றோ, முதியவர் என்றோ,இரத்தக்குறுப்புகளென்றோ,பணக்காரன் என்றோ, ஏழை என்றோ எந்தப் பேதங்களும் பார்ப்பதில்லை.

உலக மக்களே இனி வரும் ஒவ்வொரு நாட்களும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நடைபெறவுள்ள காலம். எரிப்பதற்கும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இத்தாலியின் பிராந்தியம் சுவிஸின் எல்லையிலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவில்தான் உள்ளது. ஸ்பெயினின் நிலையோ பரிதாபம், அமெரிக்கா கூடக் கையறு நிலை.

ஆனாலும், இந்தக் கொடிய கொரோனாவால் மனித குலத்தை அழித்துவிட முடியாது என்பது மட்டும் உண்மை, கொரோனா அனைவரையும் அழிக்க முன்னர் மனிதர்கள் கொரோனாவை அழித்து விடுவார்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது, ஆனால், இது வரை இருந்த உலகம் இனிக் கற்பனை மட்டுமே! அதற்கு இந்த 2020ஐ தத்திக் கடக்க வேண்டும்."

"இதுவரை இலக்கியத்தில் கூடச் சிந்திக்காத காலத்தை இதயத்தால் சந்திக்கிறோம்".

- கல்லாறு சதீஷ் -