சமூக இடைவெளி இன்றேல் நாட்டின் நிலைமை மோசம்! மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

Report Print Rakesh in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸைத் தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை மீண்டும் கூறுகின்றேன். அதன் காரணமாகவே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தும் சமூக இடைவெளி தொடர்பில் மக்கள் அனைவரும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் மக்கள் கவனம் செலுத்தாவிடின் நாட்டின் நிலைமை மோசமடையும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை இனங்காணுதல் மற்றும் தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

நாம் அவதானித்ததன்படி இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்களினால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதேவேளை, இந்தோனேஷியா, டுபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்குள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர்.

நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவுக்கேற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள்.

இது சிறந்த முறையாகும். உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகும். இலக்கு வைக்கப்பட்டுள்ள குறித்தவொரு குழுவை இனங்காணுவதற்காகப் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகின்றது.

தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை. எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை மீண்டும் கூறுகின்றேன். அதன் காரணமாகவே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தும் சமூக இடைவெளி தொடர்பில் மக்கள் அனைவரும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.