வீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை - அழகக சங்கம் எச்சரிக்கை!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் வேலையில் ஈடுபட்டால் குறித்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'கொரோனா' நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்ட நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மூலமாக மக்களை ஒன்று கூடாமல் சமுதாய இடைவெளியை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் அரசின் செயற்பாட்டுக்கு வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.

இருந்த போதும் வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலர் கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அறிகிறோம்.

இதன் காரணமாக 'கொரோனா' தொற்று பரவும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நோய் பரவல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்அறிவித்தலை மீறும் அழகக சங்க உறுப்பினர்கள் மீது மாவட்ட சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் ஊடாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், இவ்விடயத்தை வாடிக்கையாளர்களும் கவனத்தில் எடுத்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் கோருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து அழகக நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும்.

அத்துடன், இவ் அறிவுறுத்தல்களை மீறும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை 077-8089698 , 077-2032972 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.