வவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் கசிப்பு உற்பத்தி! பொலிஸார் சுற்றிவளைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, சாந்தசோலை வீதி, தம்பனைச்சோலை பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரால் அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாந்தசோலை வீதி, தம்பனைச்சோலை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளமையால் நீண்டகாலமாக அந்த வீடு பூட்டப்பட்டு காணப்பட்டுள்ளது.

உரிமையாளரின் உறவினர் ஒருவர் அவ்வப்போது குறித்த வீட்டை துப்பரவு செய்து பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குறித்த வீட்டை பார்வையிட உரிமையாளரின் உறவினர் சென்ற போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பெரல் ஒன்றில் கசிப்பு காய்சுவதற்காக, அதற்குரிய பொருட்கள் கலக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரின் உறவினர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸார் குறித்த கசிப்பு உற்பத்திக்கான பெரலினை மீட்டு அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் அவற்றை அழித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்ற போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.