கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை

Report Print Kumar in சமூகம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகின்றன.

இன்று காலை தொடக்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரையை அண்டியவாறு அமையப் பெற்றுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கி வந்த வெளிநோயாளர்பிரிவு, குழந்தை பிரசவ விடுதி, மற்றும் கிளினிக் ஆகிய சேவைகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றன.

இதற்காக காத்தான்குடி நகர சபை இந்தக் கட்டிடங்களை வழங்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

குருதி சுத்திகரிப்பு பிரிவு மற்றும் உள நல மருத்துவப்பிரிவு என்பன நிர்வாக நடவடிக்கையும் தொடர்ந்து காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டிடத்திலேயே இயங்குமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.