சம்பள ஏற்றம் போன்ற சாதாரண தேவைக்காக அலுவலகம் வரவேண்டாம்: சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

சமகால கொரோனா நெருக்கடி நிலையைக்கருத்திற்கொண்டு அரசாங்க சுற்றுநிருபத்திற்கமைய எமது அலுவலகம் மட்டுப்படுத்திய 50வீத அலுவலர்களுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. அதற்காக சாதாரண தேவைகளுக்காக அலுவலகம் வரவேண்டாம் என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட வலயக்கல்விப்பணிமனையின் அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை அலுவலகம் திங்கள், புதன்ஆகிய தினங்களில் திறந்திருக்கும். எனினும் புதன்கிழமைமாத்திரமே சேவைநாடிகளுக்கு திறந்து விடப்படும்.

அந்த நாட்களில் அலுவலகத்திற்கு சேவைநாடிகள் முதலில் நுழைவாயிலில் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகழுவிய பின்னர் சகலதரவுகளும் பதியப்பட்ட பின்னரே உள்நுழைய முடியும்.புதன்கிழமைகளிலும் சம்பள ஏற்றம் பதவியுயர்வு

போன்ற சாதாரண சேவைக்காக ஆசிரியர்கள் வருகைதர வேண்டாம்.

ஏனைய அத்தியாவசிய தேவைகள் எனின் அவற்றை முன்றலில் குறித்துச் சொல்ல வேண்டும். அதற்கான தீர்வு எம்மால் வழங்கப்படும். அதுவும் ஒவ்வொருவராகவே அனுமதிக்கப்படுவர்.

கல்விசார் உத்தியோகத்தர்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் அலுவலகத்திற்கு கொரோனாபாதுகாப்பு நடைமுறையைக் கடைப்பிடித்து சமுகமளிக்க வேண்டும்.

ஏனைய அலுவலர்கள் நிலைமைக்கேற்றால்போல் 50வீத அளவிற்கு தினம் தினம் அழைக்கும்போது வரவேண்டும். அலுவலக நுழைவாயில் மூடியே வைக்கப்பட்டிருக்கும்.உரிய அனுமதியுடன் புதன்கிழமைகளில் மட்டும் அதிகாரிகளைச் சந்திக்கலாம்.

கல்விசார் உத்தியோகத்தர்கள் இக்காலப்பகுதியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை இணையவழியில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டவேண்டும். சம்மாந்துறை முஸ்லிம் மத்தியகல்லூரி போன்ற பல பாடசாலைகள் தாமாகவே அதனை ஆரம்பித்துள்ளன.

வீட்டுத்தோட்டம் செய்யவும் ஊக்குவிக்கவேண்டும். நாம் இதுவரைஇணையவழியில் ஆறு பரீட்சைகளை நடத்தியுள்ளோம். அதற்கு நல்ல வரவேற்புக்கிடைத்துள்ளது. 4000 மாணவர்கள் வரையில் தேசிய ரீதியில் பங்கேற்றனர்.

வாட்ஸ்அப் செயலி வசதியில்லாத மாணவர்க்கு அதற்கான பத்திரங்களை பொலிஸ்அனுமதியுடன்அவரவர் வீடுகளுக்கு விநியோகித்தோம். சிலகாலத்திற்கு இந்நடைமுறை அமுலில் இருக்கும். அதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறு

இப்பணிகளில் கட்டாயம் ஈடுபடவேண்டும். சகலதரவுகளும் பிரதமசெயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.