இலங்கையில் கொரோனா வைரஸ் திடீரென தீவிரம் அடையக் காரணம் என்ன...?

Report Print Tamilini in சமூகம்
2453Shares

இன்று உலகத்திற்கு மிகப்பெரும் தலையிடியைஏற்படுத்திவரும் ஒரேயொரு விடயம் கொரோனா. எங்கு பார்த்தாலும் யாரிடம் கதைத்தாலும், ஊடகங்களை பார்வையிட்டால் என எதிலும் கொரோனா தொடர்பான பேச்சுத்தான்.

இவ்வாறு உலகளவில் பேசுபொருளான கொரோனா உலகளாவியரீதியில் பல இலட்சக் கணக்கானோருக்கு பரவியுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் 2இலட்சத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மேலைத்தேய அபிவிருத்தி அடைந்த பல நாடுகள் உட்பட 210 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி இன்றுவரை முடிவிலியாக பரவி வருகின்றது.

இவ்வாறு மேலைத்தேய நாடுகள் செய்வதறியாது திணறிக்கொண்டு பாடசாலைகள், மதுபான விடுதிகள், சிகையலங்கார நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் நாட்டு எல்லைகள் என அனைத்தையும் மூடி, நாளாந்தம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கைகளை பலநூறாக எண்ணிக்கொண்டிருந்தவேளையில் கொரோனாவை இலங்கையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.

வெயில் அதிகம் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாது என செய்திகள் வேகமாக பரவிக் கொண்டிருக்கையிலேயே இலங்கையிலும் கொரோனா பரவத் தொடங்கியது. முதலில் மார்ச் மாதம் 11ம் திகதியே கொரோனா தொற்றுக்குள்ளானவர் என இத்தாலி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டார். அன்றுமுதல் அநேகமான நாட்களில் 10க்கும் குறைவாகவேதொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் மார்ச் 30ம் திகதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நடந்தது. இவ் உயிரிழப்பின் பின்னர் மறுநாள் 21 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கையில் அவ்வப்போது எப்போதாவது உயிரிழப்புக்களும் நடந்தன.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தி ஒவ்வோர் மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலையமும் அமைக்கப்பட்டு தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைத்திய பரிசோதனைகளும் நடந்து வந்தன. கூடுதலானோருக்கு தொற்று இல்லை என்றே சோதனை முடிவுகளும் தெரியப்படுத்தின.

அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அவசர அவசரமாக தளர்த்தாது தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் கருத்திற்கொண்டு பல மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கைத் தளர்த்தி அபாய வலயமாக கருதப்பட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கை நீடித்திருந்தது.

ஆனாலும் ஊரடங்கை தளர்த்திய பல மாவட்டங்களிலும் மக்கள் கொரோனாவுக்கு பயந்தது போல நடந்துகொள்ளவில்லை. சமூக விலகலை கடைப்பிடிக்கத் தவறினர். மேலும் தொற்றுவீதம் அதிகரித்தது.

இந்நிலையிலேயே அபாய வலயங்களாக கருதப்பட்ட சில மாவட்டங்களில் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த சில மாவட்டங்களில் ஊரடங்கைத் தளர்த்தியது இலங்கை அரசு. ஆனால் மக்களோ வியாபார நிலையங்களில், மருந்தகங்களில், மரக்கறிசந்தைகளில், பொதுப்போக்குவரத்துக்களில், மதுபானக் கடைகளில் என அனைத்து இடங்களில் நெரிசலாகவே கூடினர்.

இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் அன்றே 33தொற்றாளர்கள் இன்ங்காணப்பட்டதோடு கடந்த சில தினங்களில் மட்டும் 100க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த 20ம் திகதிவரை ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடியதொற்றாளர்களின் எண்ணிக்கை 21ஆக காணப்பட்ட நிலையில், நாடு வழமைக்கு திரும்பி வருகின்றது என்ற எதிர்பார்ப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மாத்திரம் 33 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் 6 தொற்றாளர்களும், 22ம் தேதி 20 தொற்றாளர்களும், 23ம் தேதி 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஆனால் திடீரென இன்று அதாவது 24ம் தினதி 48 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு இலங்கையில் இன்னும் வேகமாக கொரோனா பரவப் போகின்றது என்ற சமிக்ஞையை காட்டி நிற்கின்றது.

இலங்கையில் முதல் 100 கொரோனா தொற்றாளர்கள் 14 நாட்களில் அடையாளம் காணப்பட்டநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட பின்னர் ஐந்து நாட்களிலேயே சுமார் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கைஅதிகரிப்புக்கு காரணம் என்னவென ஆழமாக பார்த்தோமானால் கடற்படை வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டமையே பிரதான காரணமாக தெரிகின்றது.

எதற்காக கடற்படை வீரர்கள் அதிகமாக தொற்றுக்குஉள்ளானார்கள் எனப் பார்த்தால்...

கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியனவே சுகாதார பிரிவுடன் இணைந்து கடினமாக செயற்பட்டு வருகின்றது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவராக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவே நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பெரும்பாலும் முப்படையினரே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே கடற்படை வீர்ர்கள் அதிகமாக தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்ட பாதுகாப்பு பிரிவினரே தற்போது மேன்மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறிவிடுவார்களோ என்ற அச்ச நிலைமை தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இவ் அச்ச நிலைமையை மாற்றி நாட்டை கொரோனாவில் இருந்து மீட்க அரசு மீண்டும் தொடர் ஊரடங்கை அமுல்ப்படுத்துவதோடு மக்களிடையே மீண்டும் மீண்டும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தொற்றாளர்களை சமூகத்தில் நடமாட விடாது தனிமைப்படுத்தி தொடர் சோதனைகளை மேற்கொள்ளல் மிகமிக அவசியம்.

எனவே மக்களே வீட்டில் இருங்கள், அத்தியாவசிய தேவை இருப்பினும் வெளியில் செல்வதை தவிருங்கள், சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடியுங்கள், என அரசு சொல்வதை அலசியம் செய்யாது பின்பற்றுங்கள்.

கொரோனா வைரஸ் காவியான மனிதர்கள் உங்களைச் சுற்றியும் திரியலாம் என்பதை மறவாதீர்கள். தற்போது கொரோனா வைரஸ் விலங்குகளிலும் காணப்படும் என கூறப்படுகின்றது. எனவே உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தான் என்பதனை ம(ற)றுக்காதீர்கள்...!

இலங்கையில் இதுவரையில் 417பேர் தொற்றுக்குள்ளானதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளாகிய நிலையில் 109 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் என்ன தான் நடக்கப்போகின்றதோ என பொறுத்திருந்து உற்றுநோக்குதலைத் தவிர வேறேதும் இல்லை...!