நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் எனவும், நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஊரடங்கு காலப்பகுதியில் நடமாடும் வியாபாரம் செய்வோர் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் அவர்களின் வியாபார அனுமதி ரத்துச்செய்யப்படும்.

இந்த அனர்த்த சூழ்நிலையினை பயன்படுத்தி பல வர்த்தகர்கள் சட்டத்திற்கு முரணாண வகையில் தமது வர்த்தகங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அது தொடர்பிலான பல முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இன்று முதல் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் பலசரக்கு கடைகள் அனைத்திலும் முன்பக்கத்தில் பொதுமக்களுக்கு தெரியக்கூடிய வகையில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும்.

பொருட்களின் பெயர்கள்,விலைகள் தெளிவாக தெரியும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும் என்பதுடன், அந்த விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்படவேண்டும்.

இந்த நடைமுறையினை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக மாநகரசபை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.பொதுமக்களுக்கு நீங்கள் வழங்கும் சேவையினை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த சேவைகள் சரியான முறையில் செய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுக்காமல் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வர்த்தக நிலையங்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுபவர்களுக்கு பொருட்கொள்வனவுக்கான சிட்டை வழங்கவேண்டும்.

பொருட்களின் பெயர் எழுதப்பட்டு விலைகள் எழுதப்பட்டு இந்த சிட்டைகள் வழங்கப்படவேண்டும்.இதனை சிலர் செய்வதில்லை.இது நுகர்வோர் சட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளாகும்.இனிவரும் காலங்களில் விற்கப்படும் பொருளும் அதன் விலைகளும் பற்றிச்சீட்டில் இருக்கவேண்டும்.

இதேபோன்று ஊரடங்கு நேரங்களில் வீதிகளில் சென்று விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு தான் வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

பல இடங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. வீதிகளில் நடமாடும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் கைகளில் கையுறை அணிவத்திலை,முகக்கவசம் அணிவத்தில்லையென இவ்வாறு அறிவுறுத்தல்களை பின்பற்றாது செயற்படும் நடமாடும் விற்பனையாளர்களின் வியாபார அனுமதி இரத்துச்செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.