தப்பிக்க முயற்சித்த 6 கைதிகள் பிடிபட்டனர்; ஒருவர் உயிரிழப்பு - சிறை அதிகாரிகள் இருவர் காயம்

Report Print Rakesh in சமூகம்
140Shares

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட 6 கைதிகள் பிடிபட்டனர் எனவும், ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், சிறை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணிக்கும்3 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 பேர், கயிறு மற்றும் கட்டில் விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறைச்சாலை மதில் வழியாகத் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதிகள் தப்பியோடுவதை தடுப்பதற்காக, சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைதிகள் எவராலும் தப்பியோட முடியாமல் போயுள்ளதோடு, அவர்களைக் காவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது கைதி ஒருவர் பாய்ந்து செல்ல முற்பட்ட வேளையில் மதிலில் இருந்து தவறி வீழ்ந்த நிலையில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தப்பியோட முற்பட்ட சிறைக் கைதிகளை தடுக்க முற்பட்டபோது, சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்புக் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.