35 ஆண்டுகள் கடந்தும் மாறாத வடுவாக குமுதினி படுகொலை சாட்சியம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்
233Shares

தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்கான போராட்டத்தில் கொடுக்கப்பட்ட விலைகள் ஏராளம். இழப்புக்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. பல படுகொலைச் சம்பவங்கள் இன்றும் எம் கண்முன்னே வந்து செல்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்களால் இலகுவில் மறந்து விட முடியாத ஒரு சம்பவமே குமுதினி படகு படுகொலைச் சம்பவம். இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இச் சம்பவம் இன்றும் பலரது வாழ்க்கையில் அழியாத வடுக்காளாகவுள்ளது.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையில் படகுச் சேவை இடம்பெறுவது வழமை. கடலில் ஏதாவது அசாம்பாவிதங்கள் இடம்பெற்றால் அந்தப் படகு தாமதமாக கரையை வந்து அடையும்.

இந்த வழமைக்கு மாறாக 1985 அம் ஆண்டு மே மாதம் 15 ஆம் ஆண்டு காலை புறப்பட்ட படகு கரையை வந்து அடையவில்லை. அந்தப் படகில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு குழந்தைகள் உட்பட 35 பேர் வரையில் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்து உயிருக்காக போராடி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயின் உள்ளத்தில் இருந்து சிந்திய உள்ளத்து வடுகளே இவை.

குறிகட்டுவான் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு குமுதினி படகு வழமை போல் புறப்பட்டது. அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்தக் கடலில் எனது 8 மாதக் குழந்தை உட்பட மூன்று குழந்தைகளும் 70 பேரும் பயணித்தோம்.

குமுதினி படக்கு பயணித்து இரண்டு மணித்தியாலம் கடந்து இருக்கும். எமது படகு சிறிய படகு ஒன்றில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டது. அந்தப் படகில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்திருந்த 7, 8 பேர் வந்திருந்தனர்.

எம்மை எமது படகில் ஒரு பக்கமாக செல்ல விட்டு அவர்கள் படகின் வாசல்களில் நின்றிருந்தார்கள். இரண்டு பேர் துப்பாக்கிகளை ஏந்தியவாறு அதில் நின்றார்கள். துப்பாக்கி முனைகள் எம்மை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. அவர்கள் எமது பெயரையும், ஊரையும் சொல்லி பெரிதாக கத்துமாறு கொச்சைத் தமிழில் கூறினார்கள்.

நாம் ஒவ்வொருவரும் கத்தினால் விட்டுவிடுவார்கள் என நினைத்து பயத்துடன் எமது பெயரையும் ஊரையும் சொல்லிக் கத்தினோம். இன்னும் பெரிதாக கத்துங்கள் என மீண்டும் அவர்கள் கூற நாம் பெரிதாக கத்தினோம்.

அவர்கள் பார்த்து பார்த்து ஒவ்வொருவராக அழைத்தார்கள். அவர்களை படகு வாசல் வழியாக அழைத்தார்கள். அங்கு நடக்கும் விபரிதத்தை அறியாது நாம் பெரிதாக பெயரையும், ஊரையும் சொல்லி தொடர்ந்தும் கத்திக் கொண்டிருந்தோம்.

அவர்கள் கூப்பிட்டு கூப்பிட்டு வெட்டியது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அவர்கள் எங்களை சோதனை செய்வதற்காக கூப்பிடுவதாக கருதினோம். முதல் ஆண்கள் எல்லோரையும் கூப்பிட்டு வெட்டிய பின்னர் பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கூப்பிட்டார்கள். டிக்கெற் விற்கிற ஐயாவை கூப்பிட்ட போது அவர் அசம்பாவிதத்தை கண்டு கடலில் குதித்தார்.

அப்போது அவர்கள் சுட்டார்கள். இதன்போது தான் ஏதோ நடக்குது என்பதை அறிந்தோம். அப்போது என்னையும் கூப்பிட்டார்கள். எனது 8 மாதக் குழந்தையைத் தூக்கிக கொண்டு நான் மிகுந்த பயத்துடன் நடுங்கியபடி படகின் வாசலுக்கு சென்றேன். அப்போதும் எனக்கு அவர்கள் வெட்டுவது தெரியாது.

வாசலுக்கு சென்ற போது எனக்கு தலையில் அடித்த அடியுடன் நான் விழுந்து விட்டேன். அப்போது எனக்கு தலையிலும், வயிற்றுப் பகுதியிலும் வெட்டினார்கள். எனது தலையில் கத்தியால் மூன்று இடத்தில் கொத்தினார்கள்.

வயிற்றில் வெட்டிக் கிழித்தார்கள். என்னுடைய எட்டுமாதக் குழந்தையை ஒருவர் பறித்து எடுத்தார். அந்தக் குழுந்தையின் வயிற்றில் கம்பியால் செய்யப்பட்ட கிளிப் ஒன்றால் கவ்வி அழுத்தினார்கள். குழந்தையின் வயிற்றிலும் வெட்டினார்கள். அதன் பின் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது.

நான் மயங்கி விட்டேன். வைத்தியசாலையில் இருக்கும் போதே நான் நினைவுக்கு திரும்பினேன். மயக்கம் தெளிந்த பின் நான் எனது பெயர், ஊர்களை வைத்தியசாலையில் சொன்ன பின் தான் என்னிடம் கணவன் மற்றும் அம்மா ஆகியோர் வந்தனர்.

எனது வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்கு 14 தையல் போடப்பட்டது. சயனட் பூசப்பட்ட கத்திகளே பயன்படுத்தப்பட்டது. அந்தக் கத்தியால் முதலில் வெட்டப்பட்டவர்கள் உடனடியாகவே இறந்து விட்டார்கள். இறுதியில் வெட்டப்பட்ட எங்களைப் போன்ற சிலர் அந்தக் கத்தியில் மருந்துத் தன்மை அற்றுப் போயிருந்தமையால் காயங்களுடன் தப்பினோம்.

எனது 8 மாதக் குழந்தையைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவளின் வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்கு கூட 8 தையல் போட்டப்பட்டது. இன்றும் அந்தக் காயங்கள் எனது தலையிலும், வயிற்றிலும், கன்னத்திலும் உள்ளது.

அன்று 8 மாதக் குழந்தையாக இருந்த எனது மகளுக்கு தற்போது 35 வயது. திருமணம் செய்து அவளுக்கும் பிள்ளைகள் இருக்கு. ஆனாலும் அவளின் வயிற்றில் கூட குமுதினிப் படுகொலை வடுவாக அந்த அடையாளங்கள் இன்றும் இருக்கின்றது.

அந்தக் கனங்களை மீள நினைக்கவே பயமாக இருக்கிறது. இதைச் சொன்னால் கூட நான் உயிருடன் இருப்பேனா என்ற பயமே எமக்குள் இன்றும் வருகிறது என்கிறார் அந்த தாயார் கண்ணீர் சிந்திய விழிகளுடன்.

மதியம் 12.30இற்கு நெடுந்தீவு கரையை அடைய வேண்டிய குமுதினிப் படகு கரைக்கு வரவில்லை. அந்தப்படகு பயணிக்கும் பாதையில் ஏழாற்றுப் பிரிவு என்ற ஒரு இடம் இருக்கிறது.

அந்த இடத்தில் உள்ள நீரிணையின் சுழிக்குள் அகப்பட்டால் படகு சிலவேளைகளில் வேறு திசை நோக்கிச் சென்று விடும். அப்படி தான் குமுதினி படகு சென்று விட்டது என கரையில் இருந்தவர்கள் நினைத்து தேடத் தொடங்கினார்கள்.

குமுதினிப் படகில் வெட்டு வாங்கிய ஒருவர் படக்கிற்குள் காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது குமுதினி படகு இரத்தவெள்ளமாக காட்சியளித்துள்ளது. பலர் இறந்திருந்தார்கள். இன்னும் சிலர் காயப்பட்டு இருந்தார்கள். பச்சிளங்குழந்தைகள் காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆயுதங்களுடன் வந்தவர்களை காணவில்லை. இதன்போது தனது காயத்தையும் பொருட்படுத்தாது அவர் அங்கு இரத்தம் தோய்ந்த நிலையல் இருந்த பை ஒன்றினை எடுத்து படகில் பறக்கவிட்டிருந்தார். அந்த இரத்தம் தோய்ந்த பையைக் கண்டு அந்த இடத்தில் காகம் உணவுக்காக குவிந்தது.

அக்கடலில் மீன்பிடிக்க வந்தவர்கள் காகம் பறப்பதை அவதானித்தார்கள். அதன்பின்னரே நடந்த சம்பவத்தை அறிந்து கொண்டார்கள். மீட்கப்பட்ட அனைவரும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் குமுதினிப் படக்கிற்குள்ளும், இன்னும் சிலர் பாதுகாப்புத் தேடி கடலுக்குள் குதித்து கடலுக்குள் இரையாகிய நிலையிலுமாக 2 பச்சிளங்குழந்தைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவே தமிழ் பேசும் மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்தப் படுகொலை நடந்து 35 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் ஆறாத ரணங்களாக உள்ள போதும் அதற்கான நீதி என்பது இன்று வரை........?

கி.வசந்தன்


You may like this video...