மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை கடமைக்கு வந்த சுகாதார உதவியாளர்கள் கடமை நேரத்திற்கு பின் வருகை தந்ததன் காரணமாக கையொப்பம் இடும் புத்தகம் முடிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் பொலன்னறுவையில் இருந்து வருகை தருவதன் காரணமாகவே நேரம் கடந்து வருவதாகவும், அதனை கருத்தில்கொள்ளாமல் வைத்தியசாலை நிர்வாகம் நடந்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் நேரம் கடந்து கடமைக்கு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.

இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதிலளிக்கையில், அதிகளவானோர் பொலன்னறுவையில் இருந்து வருகை தருவதன் காரணமாக பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் ஏனைய போக்குவரத்து சேவைகளும் நடைபெறாத நிலையில் உரிய நேரத்திற்கு வருகைதர முடியாத நிலையுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கவனத்தில்கொண்ட பணிப்பாளர் இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு பேசி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதாகவும், இனிவரும் காலங்களில் நேரத்திற்கு சமூகமளிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.