மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - கட்டுக்கரை குளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான நீர் விநியோக திகதியானது இன்று தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் சிறு போக செய்கைக்கு ஈவு முறையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் விரைவாக பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 1250 ஏக்கர் நெற்செய்கையும் 400 ஏக்கரில் உபதானிய பயிர்செய்கையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போது நீர்பாசன பணிப்பாளர் 1250 ஏக்கர் பயிர்செய்கை மேற்கொள்வதற்கு குளத்தின் நீர் மட்டம் 10 அடியாக இருக்க வேண்டும்.

அன்றைய நிலையில் 7.8 அடியாகவே நீர் காணப்பட்டதாகவும் தற்போதைய நிலையில் நீர்வரத்தை கணிக்கும் போது 9.3 அடியாகவே நீர் மட்டம் காணப்படுவதாகவும், என்னும் 10 அடியை அடைய வில்லை.

மேலதிக நீர் வரவு அல்லது கொள்வனவு என்பது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

அதேநேரத்தில் சிறுபோக நெற்செய்கையானது ஏனைய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மன்னார் மாவட்டதில் இது வரை ஆரம்பிக்கப்படவில்லை.அதனால் அவசர அறிவித்தலாக கருதி அனைத்து விவசாயிகளும் நெற்செய்கையை ஆரம்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலம் பிந்தி சிறு போக நெற்செய்கையில் ஈடுபடும் பட்சத்தில் "தத்து குத்தி'நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், காலம் தப்பிய மழை முன்கூட்டி வரலாம்.அது மட்டும் இல்லாமல் வீசும் வேகமான காற்று காரணமாக கட்டுக்கரை குளத்து நீரானது வற்றுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் சில வேளை இறுதி நீர் விநியோகம் தடைப்படலாம்.எனவே இப்போது காணப்படும் நீரின் அளவை கொண்டு 1250 ஏக்கர் நெற்செய்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.