ஜனாஸா எரிப்பு விவகாரம்! சுமந்திரனுக்கு நன்றி தெரிவித்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள்

Report Print Varunan in சமூகம்

ஜனாஸா எரிப்பு விவகார வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு நிந்தவூர் பிரதேச சபை அமர்வில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் 26 வது மாதாந்த கூட்ட அமர்வு நேற்று பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் முற்பகல் நடைபெற்றுள்ளது.

இதன் போது சபை ஆரம்பமான நிலையில் முதலில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த நாட்டில் பல நன்மையான விடயங்களை செய்து வந்தாலும் பல மன கசப்பான விடயங்களும் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கின்ற விடையத்தை பதில் தவிசாளர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் என பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா தாக்கத்தினால் மரணமடைந்துள்ளவர்களை எரிக்கவேண்டிய அவசியம் இல்லை புதைக்க முடியம் என அறிவுறுத்தல் விடுத்த பின்னரும் இலங்கையில் முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பது மத நம்பிக்கைக்கு முரணானது.

கொரோனா தாக்கத்தால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பது குறித்து வெளியான வர்த்தகமானி அறிக்கையினை மீளப்பெற வேண்டும்.

அத்தோடு அடக்கம் செய்வதற்கான அறிக்கையினை வெளியிட வேண்டும் என சபையின் ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு சபையில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனை சபையினர் ஏற்றுக்கொண்டனர்.

தற்போது நாட்டில் கொரோனா அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் இயற்கை சீற்றம் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களின் படகுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை புரிய மக்கள் பிரதிநிதிகள் இக்கட்டான காலநிலையில் மக்களுடன் துணை நிற்க வேண்டும் சபை உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.