வங்கியில் கடன் வாங்கி மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

சமூர்த்தி நிதியத்தின் நிதியை பிணையாக வைத்து பெறப்பட்டுள்ள வங்கி கடனை பயன்படுத்தியே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வருமானம் இழந்துள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கி வருவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு மே மாதம் வழங்கும் மொத்த நிதியுதவி 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அரசாங்கம் இந்த பணத்தை பெற்றுக்கொள்கிறது. வரவு செலவுத்திட்டம் அல்லது குறை நிரப்பு பிரேரணைகள் மூலம் நிதியை ஒதுக்கி மக்களுக்கு வழங்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கப்படாத காரணத்தினாலும் சமூர்த்தி நிதியத்தில் உள்ள நிதி போதாது என்பதாலும் வங்கியில் கடனை பெற்றே மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்கி வருகின்றோம்.

இது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. மக்களுக்கு வழங்கும் நிதி, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அல்லது எங்களில் எவருடைய பணமும் அல்ல. மக்களின் பணத்திலேயே அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குகிறோம். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.