வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக புதிய வழக்கு! நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை

Report Print Theesan in சமூகம்
186Shares

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கபட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்பட்டது.

குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக தொல் பொருட்திணைக்களத்தால் வவுனியா நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதி மன்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர்சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிசார் படிகள் பொருத்தப்பட்ட விடயத்தில் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

எனினும்குறித்த ஆலயம் தொல்பொருட்திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்தமானியில் பிரசுரிக்கப்படாமையினால் கைது செய்யமுடியாது என நீதிபதி தெரிவித்ததுடன்,மூவரையும் தலா 50ஆயிரம் படி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியானசொந்தப்பிணையில் விடுவித்திருந்தார்.

குறித்த வழக்கு இன்றைய திகதிக்கு (22-5-2020) ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் வவுனியா நீதிமன்றில் ஆலய நிர்வாகத்தினர் ஆஜராகியிருந்தனர்.

எனினும் முன்னம் வழங்கப்பட்டிருந்த வழக்கு இலக்கம் அழைக்கப்பட்டிருக்கவில்லை. புதிய பிரிவின் கீழ் வழக்கு அழைக்கப்பட்டருந்தது.

அதன்படி ஆஜராகிய மூவரையும் தலா 50 ஆயிரம் பெறுமதியான சரீரப்பிணையில் நீதவான் விடுவித்திருந்ததுடன் எதிர்வரும் 9 ஆம் மாதம் பத்தாம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டிருந்தது.

தாம் முன்னைய வழக்கின் தவணைக்கே ஆஜராகிய நிலையில் புதிய பிரிவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமை தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் இதன்போது தெரிவித்திருந்தனர்.