கிளிநொச்சி - சாந்தபுரம் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - சாந்தபுரத்தில் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலத்தில் அதிகரித்து செல்லும் கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் தமது சமூகம் முழுமையாகவே பாதிப்படையும் அபாயநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் மற்றும் முதியோர் வீதிகளில் நடமாடவோ அல்லது வீடுகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மட்ட பொது மக்கள், பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் கூறுகையில்,

சாந்தபுரம் கிராமத்தில் தற்போது என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

குறிப்பாக இப்பிரதேசத்தை அண்மித்த இரணைமடு குளத்தின் அலைகரைப்பகுதி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக்கட்டு பகுதிகள் என்பவற்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் அதிகளவில் இடம்பெற்று வருவதுடன், கிராமத்தின் எல்லைப் புறங்களிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறானா செயற்பாடுகளால் அதிகளவான இளைஞர்கள் இவற்றுக்கு அடிமையாகி வருவதுடன், பாரிய அளவில் குடும்ப பிணக்குகள் மற்றும் குடும்ப பிரிவுகள் ஏற்படுகின்றன.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் மதுவரித் திணைக்களம், விசேட அதிரடிப்படை என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது இதுவரை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்து செல்லும் நிலையே காணப்படுகின்றது.

எனவே எல்லைமீறி அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.