கிளிநொச்சியில் அழிவடையும் நிலையில் வயல் நிலங்கள்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் போதியளவு நீர் உள்ளபோதும் சிறுபோகச்செய்கைக்கு உரிய நீர் வழங்கப்படாமையினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் பதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இரணைமடுக்குளத்தின் நீர் 29 அடிக்கு மேல் காணப்படுகின்ற நிலையில் பன்னங்கண்டி மற்றும் ஊரியான், ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றிக்கருகிக் காணப்படுகின்றன.

கடந்த 14ம் திகதி பெய்த மழையினையடுத்து இரணைமடுக்குளத்தின் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டபோதும், இதுவரை தமக்கான குளத்து நீர் விநியோகிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் தமக்கான நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் தங்களுடைய வயல் நிலங்கள் நீர் இன்றிகருகி அழிவடையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இருக்கின்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் நோய்த்தாக்கம் உரிய காலத்திற்கு உரவிநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் அதி கூடிய விலைகளில் உரங்களைப்பெற்றும் மருந்துகளைப் பெற்றும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து விவசாயத்தை செய்துள்ளபோதும் இலவசமாக வழங்கக்கூடிய தண்ணீரைக்கூட வழங்காமையினால் தாங்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் வினவியபோது, நீர்விநியோகம் வாய்க்கால்கள் துப்பரவு செய்யப்படாமையினால் இந்தநீர் விநியோகத்தில் தடங்கல் நிலை ஏற்பட்டாலும் இப்போது விவசாயிகளுக்கு போதியளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.