இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும்!

Report Print Navoj in சமூகம்

உயிருள்ளவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றாமல் தேர்தலை நடாத்த முடியும் என்றால் , இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகளை கொண்ட குழாமிற்கு ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட தேர்தலை நடாத்த முடியும் என்ற சுகாதார துறையின் பரிந்துரை தொடர்பிலேயே சமூக வலைத்தள பக்கமான டுவிட்டர் மூலம் தனது கோரிக்கையினை அலி ஸாஹிர் மௌலானா வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

உரிய சுகாதார வழிமுறைகளின் ஊடாக சமூக இடைவெளியினை பேணியும் , ஜனநாயக அடிப்படையில் மக்களை ஒன்று திரட்டி வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, நேரடியாக நோய் பரவக் கூடிய , நோயினை பரப்பக்கூடிய காவிகளான உயிருள்ளவர்களோடு தொடர்பு படுகின்ற வகையில் நாடாளுமன்ற தேர்தலை முன் எச்சரிக்கையுடன் தற்போதைய சூழலில் நடாத்த முடியுமாக இருந்தால் ,

உலகளாவிய நுண்ணியல் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பிரகாரம் " அடக்கம் செய்யப்படுகின்ற இறந்த உடலங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்ற விஞ்ஞான ரீதியான உறுதிப்பாட்டினையும் , உலக சுகாதார நிறுவனத்தின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழி காட்டலையும் உதறித் தள்ளி விட்டு , கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களது உடலங்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் என ஜனாதிபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் நிலவுகின்ற நிலையிலே இலங்கையில் ஒரு தேர்தலை நடாத்துவதற்கான அச்சமற்ற சூழல் நிலவுவதாக சுகாதாரத்துறை அறிக்கை விட முடியுமாக இருந்தால் எவ்வித விஞ்ஞானபூர்வமான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களும் இன்றி, சர்வதேச நியமங்களையும் தாண்டி வைரஸ் தொற்றினால் இறந்தவர்களதும் , வெறும் சந்தேகத்திலே நோயினை உறுதிப்படுத்தாதவர்களதும் சடலங்களையும் எரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டு , அந்தந்த சமயத்தினர் , குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது உறவுகளுக்கான இறுதிக் கிரியைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முஸ்லிம்களது ஜனாசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தேசியத்திலும், சர்வதேசத்திலும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருவதுடன் , கடந்த 15ம் திகதி சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத்தாக்கல் ஒன்றினையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.